சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: ஒருவர் காயம்..!
Author: kavin kumar26 February 2022, 5:47 pm
விருதுநகர் : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மண்குண்டாம்பட்டியில் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சண்முகையா என்பவர் SR பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு 15க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் ரோல் கேப் மற்றும் பாம்பு மாத்திரை உள்ளிட்ட பட்டாசுகளை தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் ஆலமரத்துப் பட்டியைச் சேர்ந்த ராஜா (36) என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக தீக்காயம் ஏற்பட்ட ராஜாவை சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த தீவிபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.