மீண்டும் மீண்டுமா..? வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை ; படகுகளை கரையில் நிறுத்திய மீனவர்கள்…!!
Author: Babu Lakshmanan30 December 2023, 10:29 am
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரையிலான மீனவ கிராமங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 3000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் பைபர் படகுகள் என சுமார் 5000 படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லமால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.