கால்.. கைகளை.. குதறிய தெரு நாய்.. ஒரேநாளில் 5 பேரை விரட்டி விரட்டி கடித்ததால் அச்சத்தில் பொதுமக்கள்..!

Author: Vignesh
22 June 2024, 1:00 pm

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒரே நாளில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாயால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மார்கெட் சாலையில் மீன் சந்தை, காய்கறி சந்தை, இறைச்சி கடை, உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும், இப்பகுதியில் தெரு நாய்கள் ஆங்காங்கு கிடைக்கும் உணவு பொருட்களை உண்பதற்காக கூட்டமாக செல்வதுண்டு.

இந்தநிலையில், காலை சந்தையில் காய்கறி வாங்குவதற்காக வந்த சுலோக்சனா (வயது 72), கோழிப்போர்விளையை சேர்ந்த சாந்தி (வயது 45 ) ஆகியோரை அங்கு தனியாக சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதில், அவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மாலை தக்கலையில் வசிக்கும் பள்ளி படிக்கும் ஸ்ரீனிகா (வயது 11) பள்ளி முடிந்து தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை மார்கெட் சாலையில் உள்ள ஒரு பழக்கடையில் பழம் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளை கடை முன்பு நிறுத்தி ஸ்ரீனிகாவை அதன் அருகில் நிற்குமாறு கூறிவிட்டு பழம் வாங்கி கொண்டிருந்த போது ஏற்கனவே, இரண்டு பேரை கடித்த அதே தெருநாய் மாணவி ஸ்ரீனிகாவின் வலது முழங்காலை கடித்து பலத்த படுகாயம் ஏற்பட்டு அலறினார்.

உடனே மாணவியை தக்கலை அரசு மருத்துவமனைக்கு அவரது தந்தை அழைத்து சென்றார். மாணவியின் கால் தசையை கடித்ததால் அவரது காலுக்கு கட்டு போடப்பட்டது. பின்னர், சரல்விளையை சேர்ந்த லிங்கம் (வயது 42) என்பரின் கையை கடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நாய் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த தக்கலையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெத்தேல்புரத்தை சேர்ந்த ஜினி (வயது 35) என்பவரின் காலில் கடித்துள்ளது.

இதில், காயம் ஏற்பட்ட இருவரும் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒரே நாளில், 5 பேரை கடித்து குதறிய தெருநாய் அப்பகுதியில் காணப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வெறி நாயாக மாறியுள்ள இந்த தெரு நாயை பிடிப்பதோடு, பத்மநாபபுரம் நகராட்சி பகுதியில் காணப்படும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 660

    0

    0