பிஷப் உடன் சேர்ந்து மணல் கடத்திய பாதிரியார்கள்: கூண்டோடு கைது செய்த போலீசார்…நாங்குநேரி சிறையில் அடைப்பு..!!
Author: Rajesh6 February 2022, 3:49 pm
திருநெல்வேலி : திருநெல்வேலியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், 2019ம் ஆண்டு நவம்பர் முதல் கேரள மாநில பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் எம் சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார்.
எம் சாண்ட் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி அங்கிருந்து 27,000 கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தப்பட்டது. இது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின் படி, போலீசார் பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். எம்.சாண்ட் நிறுவனத்திற்கு, சேரன்மகாதேவி சப் – கலெக்டர் பிரதீக் தயாள் 9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.
கடத்தலில் ஈடுபட்ட சமீர் கைது செய்யப்பட்டார். அப்போதைய கனிமவளத்துறை உதவி இயக்குனரும், சமீருக்கு உறவினருமான சபீதா துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். மணல் கடத்தலில் ஈடுபட்ட உள்ளூர் நபர்கள் எட்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனிடையே 2021 ஜூலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று மணல் கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ் (வயது 69) மற்றும் ஐந்து பாதிரியார்களை கைது செய்தனர். அவர்களை திருநெல்வேலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாங்குநேரி சிறையில் அடைத்தனர்.