பவானி ஆற்றில் குளித்த போது திடீர் வெள்ளப்பெருக்கு : கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சோகம்..!!
Author: Udayachandran RadhaKrishnan30 October 2022, 5:43 pm
மேட்டுப்பாளையம் அருகே மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் குளிக்க சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் பத்து பேர் இன்று மேட்டுப்பாளையம் அருகே உள்ள வினோபாஜி நகர் மாம்பட்டி என்ற இடத்திற்கு பவானி ஆற்றில் குளிப்பதற்கு வந்துள்ளனர்.
பத்து பேரும் பவானி ஆற்றில் ஓரத்தில் உள்ள சிவகுமார் என்பவரது தோட்டத்தினுள் புகுந்து பவானி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த பத்து மாணவர்களும் வெள்ளத்தில் சிக்கிகொண்டனர்.
இதில் ஏழு பேர் மரக்கிளைகளையும் செடி கொடிகளை பற்றி தப்பினர் இருப்பினும் சுரேந்திரன், கணீஸ்க்கர், ராஜதுரை ஆகிய மூன்று மாணவர்கள் பவானி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து செல்லபட்ட மாணவர்களை தேடி வருகின்றனர்.