விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… தண்ணீரில் சூழ்ந்த பள்ளங்கி கோம்பை கிராமம்… கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மக்கள்…!!
Author: Babu Lakshmanan3 November 2022, 12:57 pm
கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால், அதனுடைய தீவிரத்தை காட்டி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழையானது கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பையிலிருந்து மூங்கில் காட்டிற்கு ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆற்றை கடக்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். சில அத்தியாவசிய தேவைகளுக்காக கரைபுரண்டோடும் ஆற்றின் நடுவே, கயிறை பிடித்து மக்கள் ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர்.
கனமழை தொடரும்போதெல்லாம் இதே போன்று நிலை தான் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய பொருட்களை அங்கிருந்து கொண்டு வருவதில் சிரமமானது ஏற்பட்டு இருக்கிறது.
மழை குறைந்தால் ஆற்றில் வெள்ளம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்காலிக பாலத்தை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
0
0