வெளிநாட்டு மரங்களை தடை செய்ய வேண்டும்.. வேப்பமரம், அரசமரம், ஆலமரத்துக்கு முக்கியத்துவம் : அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2024, 8:49 am
வெளிநாட்டு மரங்களை தடை செய்ய வேண்டும்.. வேப்பமரம், அரசமரம், ஆலமரத்துக்கு முக்கியத்துவம் : அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்!
கோவையில் பிளாஸ்டிக்கால் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மறுசுழற்சி செய்வதற்காக 79.73 டன் பிளாஸ்டிக்கை சேகரித்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது தனியார் கல்லூரி ( பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ) சமூகத்தில் ப்ளாஸ்டிக் பொருட்களால் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்னை குறித்து மாணவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் அடிப்படையில் சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது மறுசுழற்சி செய்யப்பட்டாத பிளாஸ்டிக் கழிவுகள்தான் என்பது கண்டறியப்பட்டது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலும், மாணவர்களிடம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணியை கல்லூரி துவங்கியது.
பல மாதங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி, மாணவர்களின் துணையுடன் மொத்தம் 79.73 டன் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து கின்னஸ் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் கின்னஸ் சாதனை புரிந்ததற்கான சான்றிதழ் கல்லூரி நிர்வாகத்துக்கு கின்னஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பதினாறு வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளோம்.
ப்ளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்த தனியார் கல்லூரி போன்று கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்த அனைவரும் தொடங்கி விட்டனர். பிளாஸ்டிக்கை தவிர்க்க ஒரு சில மக்கள் உலோகலான பொருட்களும் பயன்படுத்த தொடங்கி வருகின்றனர்.
மக்கள் மனம் மாற்றத்தின் அடிப்படையில் தான் பெரிய மாற்றம் கொண்டு வர முடியும். பிளாஸ்டிக் போன்ற பாட்டில்களை தவிர்த்து உலோகங்களான பாட்டில்களை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது பிளாஸ்டிக் பாட்டில் போன்ற பயன்பாட்டை தவிர்க்க முடியும்.
பசுமை தமிழகத் திட்டம் என்ற பெயரில் 27 சதவீதம் உள்ள வனத்தின் அளவை 33 சதவீதமாக உயர்த்த ஆண்டுக்கு 10 கோடி நிதியை முதல்வர் வழங்கியுள்ளர். அதேபோன்று நீர்நிலைகளை பாதுகாக்கவும் திட்டம் வகுத்துள்ளார். மேலும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காலநிலை மாற்றத்தினால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். உலக வங்கிகள் உதவி மூலம் ஆயிரத்து 600 கோடியில் கடலோரப் பகுதியில் உள்ள பாதிப்புகளை தவிர்க்க பசுமை பணிகள் ஏற்படுத்த திட்டத்தை தொடங்க இருக்கிறோம். மேலும் வெளிநாட்டு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வனத்துறை அமைச்சர் மூலம் அறிவிப்பை சந்துள்ளோம் மலை பிரதேசங்களில் வெளிநாட்டு மரங்களால் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்து வெளிநாட்டு மரங்களை அகற்ற இருக்கிறோம். தைல மரங்களுக்கு பதிலாக சவுக்கு மரங்களை நடவு செய்யப்பட்டு வருகிறது.
முழுமையாக வெளிநாட்டு மரங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதில் வேப்பமரம், அரசமரம், ஆலமரம், மூங்கில் மரம், பூவரசன் போன்ற நாட்டு மரங்கள் நடவு செய்தால் பல்வேறு பறவைகளையும் அனைவரும் நல்ல ஆக்சிஜன் இயற்கைக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றார்.