போ சாமி என கூறியதும் வனப்பகுதிக்குள் சென்ற யானை.. நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வீசிய வனத்துறை : கொந்தளித்த மக்கள்!! (வீடியோ)
Author: Udayachandran RadhaKrishnan2 July 2022, 1:53 pm
கோவை : காட்டு யானைகள் மீது பட்டாசு விடக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவை மீறி மேட்டுப்பாளையத்தில் வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு அருகிலும் விளைநிலங்களிலும் புகுந்து வருகிறது.
இதில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சாலையில் சமயபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சமயபுரம் கிராமப் பகுதியின் சாலை வழியாக கடந்து கல்லார் வன பகுதிக்கு தண்ணீர் குடிக்க செல்வது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது
இந்நிலையில் இன்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி காட்டு யானை ஒன்று மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சாலையில் சிறிது நேரம் உலா வந்தது பின்னர் சமயபுரம் கிராமத்திற்குள் நுழைந்தது.
அந்த காட்டு யானையை அப்பகுதி மக்கள் சிலர் போ சாமி போ என அன்புடன் கோஷங்களை எழுப்பிய நிலையில் திடீரென பட்டாசு சத்தம் கேட்டது. அங்கு யானையை விரட்ட வந்த வனத்துறையினர் யானையை விரட்ட பட்டாசுகளை வெடிக்க செய்தனர். இதனையடுத்து அந்த யானை விரு விருவென கிராம சாலையில் ஓடி பின்னர் புதருக்குள் புகுந்து சென்றது.
அண்மையில் நீதிமன்றம் யானைகளை விரட்ட பட்டாசுகளை வெடிக்க கூடாது என உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை மீறி காட்டு யானைகள் மீது பட்டாசை வீசி விரட்டிய சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது