மின்சாரம் கூட எனக்கு வினையாக அமைகிறது.. மேடையில் நிர்வாகியை வறுத்தெடுத்த திமுக முன்னாள் அமைச்சர் நாசர்!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2024, 9:22 am
திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் ஆவடி எம்எல்ஏ நாசர், பூவிருந்தவல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். கடந்த 2எம்பி தேர்தல்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது மேடையின் பக்கவாட்டில் கட்சியினர் சிலர் பேசியதால் வந்த சத்தத்தில் ஆத்திரமடைந்த நாசர் அவரை நோக்கி ஒருமையில் கண்டித்தார்.
ஏய் கண்ணாடி சும்மா இருயா, இங்க பேசிட்டு இருக்கும் போது நீ ஏன் பேசுற, இங்க வந்து பேசு என ஒருவகையான எரிச்சலுடன் நாசர் மேடையில் மைக்கில் கட்சி நிர்வாகியை கண்டித்தார்.
தொடர்ந்து நாசர் மேடையில் பேசி கொண்டிருந்த போது இரண்டு முறை மின் தடை ஏற்பட்டு அனைத்து விளக்குகளும் அணைந்து இருள் சூழ்ந்தது.
தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய நாசர் மைக்கை தட்டி, தட்டி பார்த்து விட்டு மின்சாரம் கூட தமக்கு தான் வினையாக வருவதாக ஆதங்கம் தெரிவித்தார்.
இவ்வளவு நேரம் எம்எல்ஏ கிருஷ்ணசாமி பேசிய போதோ, அல்லது ராஜேந்திரன் பேசிய போதோ மின் தடை ஏற்பட வேண்டியது தானே, தனக்கு தான் தடையாக வர வேண்டுமா என மேடையில் நாசர் ஆதங்கம் தெரிவித்தார்.
திருவள்ளூரில் நாற்காலி கொண்டு வர தாமதமானதால் கட்சி நிர்வாகி மீது கல் எறிந்தது, திருத்தணியில் மைக்கை தட்டிவிட்டதாக எம்எல்ஏ உதவியாளரை மேடையில் தாக்கியது என பொது இடங்களில் அத்துமீறி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஆவடி எம்எல்ஏ நாசரிடம் இருந்த பால்வளத்துறை அமைச்சர் பதவி கடந்தாண்டு மே மாதம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.