மன்மோகன் சிங் மறைவு; பல்வேறு நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் ரத்து! கருப்பு பேட்ச் உடன் இந்திய அணி!
Author: Hariharasudhan27 December 2024, 9:53 am
மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி, அடுத்த 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. இவரது இறப்பிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதலமைச்சர் மற்றும் உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்டு, அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து டெல்லியில் புறப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்படுவதுடன், அடுத்த 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுமெ என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இன்று (டிச.27) முதல் ஜன.1 வரை தமிழ்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும். இந்த 7 நாட்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
இதையும் படிங்க: அவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
மேலும், கருப்பு பட்டை அணிந்து இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்கள் கருப்பு பட்டையுடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதனிடையே, நாளை (டிச.28) மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.