இல்லாத நாட்டுக்கு 9 மந்திரிகள்… பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்.. ஓபிஎஸ்-ஐ விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

Author: Babu Lakshmanan
27 September 2022, 4:36 pm

சென்னை : இல்லாத நாட்டுக்கு ஒன்பது அமைச்சர்கள் என்பதைத் போலத்தான் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழர் தந்தை ஆதித்தனாரின் 118வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஆதித்தனாருக்கு சிலை வைக்க வேண்டும் என உத்தரவிட்டவர் எம்ஜிஆர் தான். ஜெயலலிதா அவர்கள் தான் ஆதித்தனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தார், எனக் கூறினார்.

அப்போது, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- காவல்துறையினர் யார் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தானே இருந்தது என்று ஜெசிடி பிரபாகர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அப்படி என்றால் ஓபிஎஸ் திமுகவும் கைகோர்த்து செயல்படுகின்றனர், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அதிமுக ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்தது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவியே இல்லை. நாடே இல்லாத ஒரு நாட்டிற்கு 9 மந்திரிகள் என்று சொல்வதைப் போலத்தான் பன்னீர்செல்வத்தின் செயல்கள் இருக்கிறது.

திமுகவின் மாவட்ட அமைப்புகளுக்கான மனுத்தாக்கல் 700 பேர் கூட வரவில்லை. அதில் எத்தனை பேர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும். திமுகவில் ஆதிக்கசாதியினருக்கே முக்கியத்துவம் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
அவர்கள் ஊருக்கு தான் உபதேசம் பண்ணுவார்கள். சமூக நீதி என்று சொல்லும் இவர்களின் ஆட்சியில்தான் தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது, என ஜெயக்குமார் கூறினார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!