ஊரெங்கும் மழை, வெள்ளம்… பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டதா..? தமிழக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி..!!
Author: Babu Lakshmanan5 August 2022, 11:03 am
மதுரை : கனமழையால் பாதிக்கப்பட்டு வரும் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதா…? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- தமிழகத்தில் தற்போது கன மழை பெய்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் மழை பெய்து வருவதால், அங்கே தண்ணீர் திறந்து விடுவதால், தமிழகத்தில் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் வரலாறு காணாத வகையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து கொண்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் அது ஒரு லட்சம் கன அடியில் இருந்து தற்போது இரண்டு லட்சம் கனஅடிக்கு மேல் வருகிறது.
மேட்டூரில் 120 அடியை எட்டி நீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் செல்லும் 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் 14 மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இது போதாது என்று கேள்வி எழுந்துள்ளது.
கடந்த அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடியார் ஆட்சியில் இது போன்ற காலங்களில் அனுபவம் வாய்ந்த மூத்த ஆட்சி தலைவர்களை கண்காணிப்பு அலுவலக நியமனம் செய்யப்பட்டது. அவர்கள் அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொடர் வழிகாட்டுதலை, அறிவுரை வழங்கி வருவார்கள்.
தற்பொழுது பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. அப்படி நியமித்திருந்தால் யார் யார் எந்த மாவட்டங்கள் என்று இருந்தால், மக்களுக்கு தங்கள் தேவைகளை குறைகளை சொல்ல எளிதாக இருக்கும்.
ஏற்கனவே அம்மா ஆட்சி காலத்தில் வருவாய் துறை சார்பில் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி இருந்தது. அதன் மூலம் மக்கள் குறைகளை சுட்டி காட்டினார்கள். அதுமட்டுமல்ல தாழ்வான பகுதியில் உள்ளவர்களை முகாம்களுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு மருத்துவ வசதி, சுகாதார வசதி, குழந்தைகளுக்கு பால் பவுடர் ஆகியவை வழங்கப்பட்டது. 24 × 7 என்ற அடிப்படையில் உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இதே போல் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்பொழுது வெள்ளம் வருகின்ற இடங்களில் இளைஞர்கள் செல்பி எடுத்து வருகின்றனர். இது போன்ற காலங்களில் காவல்துறையும், வருவாய்த் துறையும் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். மேலும், துரைப்பாலங்களில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வர முயற்சிக்கும் போது, சில நேரங்களில் அடுத்து செல்லப்படுகிறது.
அதேபோல் 24 நேரமும் கரையோரங்களை கண்காணித்து வரவேண்டும். அதேபோல், ஆடு மாடுகளை குளிப்பாட்ட அனுமதிக்க கூடாது. அது மட்டுமல்ல, தற்போது ஆடி மாதங்களில் ஆற்றுக்கரையோரங்களில் பாரம்பரியம் மிக்க கடமை செய்ய மக்கள் கூடுவது வழக்கம். அதுபோன்ற நேரங்களில் மக்களின் மனதை புண்படுத்தாமல் அவர்களுக்கு எடுத்து சொல்லிட வேண்டும். குறிப்பாக, சிறுவர்கள் தண்ணீர் அருகில் செல்வார்கள். அவர்களை எச்சரிக்கையுடன் கண்காணித்தல் வேண்டும்.
தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், இது குறித்து அறிக்கை வெளியிட்டு கொண்டு வருகிறார். அரசும் இது கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பேரிடர் காலங்களில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல், அரசு மீட்பு பணியில் ஈடுபட வேண்டும், என்று அவர் கூறினார்.