இப்டியே போனா எதிர்கட்சி மட்டும் தான்.. மீண்டும் அதிமுகவில் குழப்பம்!

Author: Hariharasudhan
19 November 2024, 5:10 pm

கருத்து வேறுபாடு இருந்ததால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

திருச்சி: கட்சியைப் பலப்படுத்தும் விதமாகவும், நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும் அதிமுக முக்கிய தலைவர்களைக் கொண்ட கள ஆய்வுக் குழுவை அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்தார். இதன்படி, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில அதிமுக கள ஆய்வுக் கூட்டம் இன்று (நவ.19) நடைபெற்றது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மேடையில் பேசினார்.

அப்போது அவர், ” எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அதன் அடிப்படையில்தான் உங்களுடன் நாங்கள் கலந்துரையாட வந்துள்ளோம். ஆனால், அதிமுக நிர்வாகிகளாகிய நீங்கள், கவனமின்றி, பொறுமையின்றி இருக்கிறீர்கள் என்பதைப் பார்த்து சற்று வருத்தமாக இருக்கிறது.

இப்படியே இருந்தால் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டியது தான். கருத்து வேறுபாடுகள் இருந்ததால்தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். நமக்குள் ஒற்றுமை இல்லை, எனவே, இனியாவது ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என வந்து விட்டால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

நம் உடம்பில் ஓடுவது அதிமுக உதிரம். நிச்சயமாக 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ” நமது கட்சிக்குள் இருக்கும் குழப்பம் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றை பேசித் தீர்ப்போம்.

முடியவில்லை என்றால், அதை நமது பொதுச் செயலாளரிடம் (எடப்பாடி பழனிசாமி) கொண்டு செல்வோம். ஆபரேசன் செய்யவில்லை என்றால் வைத்தியம் செய்ய முடியாது. சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என அனைவரும் முடிவு செய்து இருந்தபோது, அப்போது தான் தீர்ப்பு வந்து அவர் சிறை சென்றார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

AIADMK thangamani

நம்பிக்கையான ஒருவரை தெய்வமே பார்த்துக் கொடுத்தது. அதேநேரம், செல்லாக் காசுகளால் எந்த ஒரு பயனும் இல்லை. எனவே, அது குறித்து யாரும் கவலைப்படாதீர்கள். ஓ.பன்னீர்செல்வத்திற்கு துரோகம் செய்தவர்கள் சசிகலாவும், தினகரனும் மட்டும் தான்” என்றார்.

முன்னதாக, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் சில காலங்கள் முதலமைச்சராக இருந்தார். அதன் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல், சமரசம் செய்யப்பட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும் மாறினர். இதன் பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்.

இதையும் படிங்க: ஜிம்மில் அதிக வொர்க் அவுட்.. உடற்பயிற்சி கூட உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்!

இதனை அடுத்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக களம் கண்டு எதிர்க்கட்சியாக மாறியது. பின்னர் மீண்டும் ஏற்பட்ட அதிமுக விரிசலால், எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராக மாறினார். அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை அடுத்து தேமுதிகவுடன் கூட்டணி வைத்து அதிமுக 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Famous Actor Played Villain Role against Sivakarthikeyan சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ… அடுத்தடுத்து தோல்வியால் திடீர் முடிவு!
  • Views: - 50

    0

    0