பெற்றோரிடம் ஓடிப்போய் சொன்ன மகள்.. நள்ளிரவில் பள்ளியை சூறையாடிய உறவினர்கள்.. மணப்பாறையில் பரபரப்பு!
Author: Hariharasudhan7 February 2025, 8:54 am
மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக தாளாளர் கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஒரு மாணவி 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், இம்மாணவிக்கு, பள்ளித் தாளாளரின் கணவர் வகுப்பறையிலேயே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், இது குறித்து அந்த மாணவி, பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றவுடன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனடியாக பள்ளிக்குச் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும், வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து சேதப்படுத்தினர். அது மட்டுமல்லாமல், பள்ளித் தாளாளரின் கணவரைப் பிடித்து போலீசிலும் உறவினர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து, தாளாளர் மற்றும் பள்ளி முதல்வரைக் கைது செய்யக் கோரி திருச்சி – திண்டுக்கல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து, திருச்சி எஸ்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், “மாணவி பாலியல் சீண்டல் வழக்கு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவரை கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளியில் மாணவிகளுக்கு இதுபோன்று ஏற்படும் பாவியல் சீண்டல்கள் நடைபெறாமல் தடுத்திட, அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையும் படிங்க: வயிறு வலியோடு அலறிய 9ஆம் வகுப்பு மாணவி.. ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மேலும், இதில் வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டு உள்ளனரா என்றும் விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை மூட வேண்டும் என்று, பள்ளியை தொடர்ந்து செயல்படவிட மாட்டோம் என்றும் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.