ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த அரசுப் பள்ளி ஊழியர்.. சிறார் பள்ளியில் கல்லூரி மாணவர்கள்!
Author: Hariharasudhan22 November 2024, 5:36 pm
நெல்லையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சிறுவர்கள், அழைத்த நபரிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், புதுமணை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அரசுப் பள்ளி ஒன்றில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். அப்போது இந்தப் பள்ளியில் படித்த சில மாணவர்களுடன் பாலமுருகன் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறு நன்கு பழகிய நான்கு மாணவர்கள், நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், குறிப்பிட்ட நான்கு மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு பாலமுருகன் அழைத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் பேரில் பாலமுருகனைப் பார்க்க வந்த நான்கு பேரும் சேர்ந்து, ஐந்து பேராக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளனர். இதனை பாலமுருகனுக்கே தெரியாமல் அந்த சிறுவர்கள் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர்.
பின்னர், இச்செயலில் ஈடுபட்ட பிறகு சிறிது நாட்கள் கழித்து பாலமுருகனுக்கு அந்த வீடியோக்களை அனுப்பி மிரட்டும் வேலையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அவ்வப்போது பாலமுருகனை மிரட்டி செல்போன், 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட பொருள் மற்றும் ரொக்கத்தையும் மாணவர்கள் அவ்வப்போது பெற்று வந்து உள்ளனர். இது ஒரு கட்டத்தில் உச்சம் அடைந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் பணம் கேட்டு பாலமுருகனை வற்புறுத்தி உள்ளனர்.

இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத பாலமுருகன், பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்தப் புகாரின் பேரில் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து, அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நாதக ஸ்லீப்பர் செல்கள்.. புது குண்டு போடும் சீமான்!
மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரம், மாணவர்களை இவ்வாறு அழைத்துச் செல்லும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.