பெண்ணின் உடையை கிழித்து தரதரவென இழுத்துச் சென்ற திருநங்கைகள்.. நெல்லையில் பயங்கரம்!
Author: Hariharasudhan6 January 2025, 5:25 pm
நெல்லையில், சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் உடையை கிழித்து, நடுத்தெருவில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், களக்காடு அடுத்த பெருமாள் கோயில் அருகில் உள்ள கக்கன் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். கணவர் மற்றும் இரு மகன்களை பிரிந்த இவர், தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், கேரளாவில் பணிபுரியும் தனது மகன் புவனேஸ்வரனை, அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த அப்பெண், அச்சிறுமியை தனியாக அழைத்து கண்டித்து உள்ளார். அது மட்டுமல்லாமல், சிறுமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுமி, பெண் தாக்கியதை தனது திருநங்கையான அண்ணன் இசக்கி பாண்டியிடம் கூறியுள்ளார். இதனைத் கேட்டு ஆத்திரமரைடந்த இசக்கி பாண்டி, குலசேகரப்பட்டினத்தில் இருந்து சக கூட்டாளிகளான திருநங்கைகளை வருமாறு அழைத்துள்ளார்.
இவ்வாறு, அவரது அழைப்பை ஏற்று 3 திருநங்கைகள் வர, அவர்கள் பெண்ணைத் தேடிச் சென்று தகராறில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர், ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை கம்பால் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். மேலும், பெண்ணின் உடைகளைக் கிழித்து, தரதரவென அப்பகுதி வழியாக தெருவில் இழுத்துச் சென்றுள்ளனர்.
இதனை அப்பகுதியைச் சேர்ந்த நபர், தனது செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். பின்னர், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய இசக்கி பாண்டி உள்ளிட்ட நான்கு திருநங்கைகளை தேடி வருகின்றனர். அதேநேரம், இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: ஓசியில் பைக் பழுது? ஒர்க் ஷாப் உரிமையாளரை அடித்த எஸ்ஐ.. வெளியான சிசிடிவி காட்சிகள்!
மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்றும், தன்னிடம் கட்டாயப்படுத்தி சமாதானமாக போகுமாறு கையெழுத்து வாங்கியதாகவும் பெண் கூறியுள்ளதாக தனியார் ஊடக செய்தி தெரிவிக்கிறது. எனவே, இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.