சிசிடிவி காட்சி வேண்டும்.. நிதியுதவியை உதறிய உறவினர்கள்.. விக்கிரவாண்டி குழந்தை பலியான விவகாரத்தில் பரபரப்பு!
Author: Hariharasudhan4 January 2025, 1:57 pm
விக்கிரவாண்டி அருகே பள்ளி செப்டிக் டேங்கில் குழந்தை பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என அவரது தாயார் கூறியுள்ளார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் UKG படித்து வந்த 4 வயதான சிறுமி லியா லட்சுமி, நேற்று பள்ளி உணவு இடைவேளையின் போது, வளாகத்தில் இருந்த செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்தார்.
இதனையடுத்து, குழந்தையின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் கேள்வி எழுப்பினர். எனவே, கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து பள்ளி ஊழியர்கள், குழந்தையை மீட்டு காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகளை பள்ளி நிர்வாகம் வெளியிட்டது.
இதனிடையே, உயிரிழந்த சிறுமியின் தந்தை பழனிவேல், இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி, உயிரிழந்த குழந்தை லியா லட்சுமியின் வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் ஆகிய 3 பேரையும் இன்று அதிகாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், இன்று காலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை லியா லட்சுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த குழந்தையின் பெற்றோரிடம் முதல்வர் அறிவித்த பொது நிவாரண நிதி ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
இதையும் படிங்க: அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. கே.பாலகிருஷ்ணனுக்கு சேகர் பாபு திடுக் பதில்!
அப்போது முதலில் அதனை பெற்றுக் கொண்ட உறவினர்கள், அமைச்சர் பொன்முடி திரும்பிய உடனே அதனை உதறினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.