கோவையில் அடிக்கடி மின்வெட்டு.. காரணம் தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2022, 2:26 pm
கோவை : பராமரிப்பு பணிகளுக்காகவே ஒரு சில இடங்களில் மின்தடை செய்யப்பட்டு வருவதாகவும், மின்தடை இருப்பதாக பொதுவாக சொல்லமுடியாது எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி பகுதியில் சுகாதார மையங்கள ,புதிய சாலைகள் அமைத்தல் உட்பட 9.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 திட்டங்களுக்கான பணிகளை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி வைத்தார் .
முத்தண்ணன் குளகரையில் புதிய சாலைகள் அமைக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கோவை மாநகராட்சி வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகளுக்கு தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்து வருகின்றார் எனவும், சாலை பணிகள், 63 சுகாதார கட்டிடங்களுக்கு 15.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
8.18 கோடிக்கு ஏறகனவே பணிகள் துவங்கப்பட்டுள்ளது எனவும், இன்று 7.14 கோடி ரூபாய்க்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர், குப்பை எடுக்க கூடுதல் வாகனங்கள் வாங்க 105 வாகனங்களுக்கு 7.50 கோடி நிதிக்கு ஒப்புதல் வழங்கி இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.
கோவை நகரில் பொதுவான மின்வெட்டு என சொல்லக்கூடாது எனவும், ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்த அவர்,மின்சார வாரியத்தை பொறுத்த வரை கடந்த காலங்களை போல் இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க 625 கோடி மதிப்பில் 8905 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டு 96 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டு விட்டது எனவும், இன்னும் 4 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் இணைப்பு வழங்கப்பட வேண்டியிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படுமா என்ற கேள்விக்கு,
சுயவிளம்பரத்திற்காக பேசுபவர்களுக்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.