இனி புழல் சிறையில் வீடியோ கால் மூலம் உறவினர்களிடம் பேசலாம் : பெண் கைதிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்!!
Author: Udayachandran RadhaKrishnan14 April 2023, 9:52 pm
சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் சட்டப்பேரவையில் 10.4.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
அவரது அறிவிப்பின்படி, புழல் பெண்கள் தனிச்சிறையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறைவாசிகளுக்கான வீடியோ அழைப்பு சோதனை (trial video calling) இன்று திரு. அமரேஷ் பூஜாரி சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை டிஜிபி/தலைமை இயக்குனர் அவர்கள் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆர். கனகராஜ், சிறைத்துறை டி.ஐ.ஜி (தலைமையிடம்) ஆ.முருகேசன், சிறைத்துறை டிஐஜி, சென்னை சரகம் மற்றும் நிகிலா நாகேந்திரன், ஆர்.கிருஷ்ணராஜ், சிறை கண்காணிப்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.
சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இந்த வீடியோ அழைப்பு வசதி மூலம் ஒரு மாதத்தில் 10 முறை தொடர்பு கொள்ளலாம். அவர்கள் ஒவ்வொரு அழைப்பிலும் 12 நிமிடங்கள் வரை பேச முடியும் (ஒரு சிறைவாசிக்கு மாதத்திற்கு மொத்தம் 120 நிமிடங்கள் பேச வாய்ப்பு அளிக்கப்படும்
புழலில் 1 மாதம் இந்த சோதனை முறை நடத்தப்படும், அதன்பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த வசதி தொடங்கப்படும். நீண்ட தூரத்தில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் அவர்களை நேரடியாக சிறைக்கு வந்து சந்திக்க முடியாதவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதிகள் சிறைவாசிகளுக்கு சிறந்த குடும்ப இணைப்பை வழங்குவதோடு, மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் உள்ளது.