தமிழகத்தில் மேலும் மூன்று கோவில்களில் முழு அன்னதான திட்டம்.. அர்ச்சகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan4 May 2022, 5:14 pm
தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23-ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழிநுட்பத்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அன்னை தமிழில் அர்ச்சனை அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60% பங்குத்தொகை தரப்படும்.
தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டண சீட்டுகள் அறிமுகம் செய்யப்படும். 27 திருக்கோயிலைகளில் ரூ.80 கோடியில் புதிய திருமண மண்டபங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஒருகால பூஜை திட்டத்தில் நிதி வசதியற்ற மேலும் 2,000 கோயிலுக்கு அரசு மானியம் திட்டம் விரிவுபடுத்தப்படும். 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார் பெருமானுக்கு முப்பெரும் விழா நடத்தப்படும் என்றும் தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம், 3 நாள் அரசு விழா நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மயிலாப்பூர், நெல்லை, தஞ்சை, திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களில் மகாசிவராத்திரி அன்று மாபெரும் விழா நடத்தப்படும். மேலும் 8 கோயில்களில் யானைகளுக்கு குளியல் தொட்டி அமைக்கப்படும் என்றார்.
திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோயில் சார்பில் புத்தாடை வழங்கப்படும். 14 திருக்கோயில்களில் ரூ.11 கோடியில் அன்னதானம் கூடம் அமைக்கப்படும் என்றும் ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை கோயில்களில் முழுநேர அன்னதானம் திட்டம் இந்தாண்டு தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.