விஜயின் முக்கிய குற்றச்சாட்டு.. தீயாக பரவிய தகவல்.. ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு!
Author: Hariharasudhan21 January 2025, 9:58 am
எந்த அரசியல் அமைப்புகளுடனும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூர் சென்றார்.
அப்போது, மக்கள் மத்தியில் பேசிய அவர், “டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டைத் தானே பரந்தூர் பிரச்னையிலும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படித்தானே பரந்தூர் மக்களும்.
அப்படித்தானே அரசு யோசிக்க வேண்டும். ஆனால், அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை? ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்தத் திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதனை மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில், பரந்தூரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு நிலம் இருப்பதாகவும், இந்த நிறுவனம் அரசியல் தொடர்புகளுடன் இருப்பதாகவும் தகவல் பரப்பப்பட்டது. இந்த நிலையில், இந்த பரவிய தகவல்களுக்கு, ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!
அதில், “இந்தியாவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளராக ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பரந்துாரில் எங்களுக்கு பெரிய அளவில் நிலம் இருப்பதாக, சிலர் அரசியல் காரணங்களுக்காக தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், எங்கள் நிறுவனத்துக்கு எந்த நிலமும் இல்லை. எந்த அரசியல் அமைப்புகளுடனும் எங்களுக்கு எந்த தொடர்பு இல்லை” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.