ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த கும்பல் கைது… பணம், 5 செல்போன்கள் பறிமுதல்

Author: kavin kumar
26 February 2022, 6:18 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைன் லாட்டரி மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சந்தை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக முத்தியால்பேட்டை சார்பு ஆய்வாளர் சிவபிரகாசத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்த போது இளைஞர் ஒருவர் லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்டு வருவது கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் விழுப்புரம் மாவட்டம் சின்ன கோட்டகுப்பத்தை சேர்ந்த சுப்ரமணி @ அப்புனு (35) என்பதும், இவர் கோட்டகுப்பத்தை சேர்ந்த ராஜ்குமார்,

முகமது ரஃபிக் என்கிற லாட்டரி ஏஜெண்டுகளிடமிருந்து ஆன்லைன் லாட்டரி வாங்கி புதுச்சேரியில் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து லாட்டரி ஏஜெண்டுகளான ராஜ்குமார் மற்றும் முகமது ரஃபியை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோட்டகுப்பத்தை சேர்ந்த சங்கர், புதுச்சேரியை சேர்ந்த ராஜா, பஞ்சவர்னம், சிவா ஆகியோர் மூலமாக ஈரோடை சேர்ந்த பிரபல லாட்டரி ஏஜெண்ட் மோகன் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி சுப்பிரமணி போன்ற சப்- ஏஜெண்டுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூபாய் 60 ஆயிரம் பணம், ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய ஐந்து செல்போஃன்கள் மற்றும் லாட்டரி டிக்கெட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போலீசாரின் இந்த அதிரடி கைதால் தலைமறைவாக உள்ள ஈரோட்டை சேர்ந்த முக்கிய லாட்டரி ஏஜெண்டு மோகன் உட்பட புதுச்சேரி மற்றும் கோட்டகுப்பத்தை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ