பத்திரிகையாளரை ஒருமையில் திட்டிய கங்கை கங்கை.. மன்னிப்பு கேட்க மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கோரிக்கை.!

Author: Rajesh
4 May 2022, 5:05 pm

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் யூடியூப் சேனலில் நடந்த நேர்காணலில், இசைஞானி இளையராஜா ஒரு புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் நரேந்திரமோடியை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுடன் ஒப்பிட்டுள்ளது குறித்து, பத்திரிகையாளர் ஷங்கர்சர்மா கங்கை அமரனிடம் கேள்வியாக முன்வைக்கிறார். ‘அந்த முன்னுரை உங்களால் எழுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு கருத்து பரவுகிறதே?’ என்று கங்கை அமரனிடம் கேட்கிறார்.

இந்த கேள்வியினால் கோபமடைந்த கங்கை அமரன், பத்திரிகையாளர் ஷங்கர்ஷர்மாவை மிரட்டும் வகையில் அவரை நோக்கி கையை நீட்டியபடி ‘வாயை மூடு’ என்று ஒருமையில் பேசுகிறார். இதனையடுத்து, சங்கர்ஷர்மா சிறிதும் கோபப்படாமல், இது தன்னுடைய கருத்து இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டு, இப்படி ஒரு கருத்து பரவுவதை அவருக்கு சுட்டிக்காட்டுகிறார். இருந்தபோதும், அதை சிறிதும் காதுகொடுத்துக் கேட்காத கங்கை அமரன், பத்திரிகையாளர் சங்கர்ஷர்மாவுக்கு எதிராக மிகவும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கு விரும்பினால் பதில் சொல்லலாம் இல்லையென்றால் பதில் சொல்ல விருப்பமில்லை என்று கூறிவிட்டு கடந்து செல்லலாம். அதைவிடுத்து, கேள்வி கேட்டவரை மிரட்டுவது அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். அத்துடன் அவரை தரக்குறைவாகஇ அநாகரீகமாக பேசுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, பத்திரிகையாளரை மிரட்டும் வகையிலும், அநாகரீகமாகவும் பேசிய கங்கை அமரனை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

கங்கை அமரன் உடனடியாக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!