காவல்துறையிடம் சிக்கிய கஞ்சா வியாபாரி கவிதா.. தப்பிக்க வைத்த திமுக கவுன்சிலர் : ஷாக்கில் போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 1:27 pm

காவல்துறையிடம் சிக்கிய கஞ்சா வியாபாரி கவிதா.. தப்பிக்க வைத்த திமுக கவுன்சிலர் : ஷாக்கில் போலீசார்!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கயன்கோட்டை- எல்லப்பட்டி சாலையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த சதீஷ்,முருகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரித்து பரிசோதனை செய்ததில் அவர்களிடம் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தமிழகம் காவல்துறை மற்றும் ஆந்திர காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் கஞ்சா கடத்தல் குற்றவாளியான கவிதா(45) என்ற பெண்ணிடம் வாங்கியதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சார்பு ஆய்வாளர் இத்ரீஸ்கான் தலைமையில் தனிப்படையினர் தேவாரம் மூனாண்டிபட்டி பேச்சியம்மன் கோவில் வடக்கு தெருவில் நேற்று முன்தினம் இரவு கவிதாவை பிடித்து விசாரணை செய்து கொண்டிருக்கும் போது, அங்கு வந்த தேவாரம் 1வது வார்டு திமுக கவுன்சிலரும் பேரூராட்சி நியமனக்குழு தலைவரும்,திமுக மாவட்ட பிரதிநிதியுமான ஆசைத்தம்பி காவல்துறையினரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவருடன் அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து காவல்துறையினர் கவிதாவை கைது செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையில் பேசி உள்ளனர்.

இதுதான் சந்தர்ப்பம் என கஞ்சா கடத்தல் குற்றவாளி கவிதாவின் தாய் முத்துப்பேச்சி காவல்துறையினரின் கையை தட்டி விட்டு கவிதாவை அங்கிருந்து தப்பி ஓட வைத்துள்ளார். அவரைப் பிடிக்க சென்ற காவலர்களையும், ஆசைத்தம்பி தலைமையில் அப்பகுதியில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கையில் கிடைத்த பிரபல கஞ்சா கடத்தல் குற்றவாளியை போலீசார் பிடித்த நிலையில், திமுக கவுன்சிலரால் அந்த குற்றவாளி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக கவுன்சிலரால் அங்கு 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததால் காவல்துறையினர் பாதுகாப்பு காரணம் கருதி அங்கு இருந்து திரும்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்ட கண்காணிப்பாளரிடம் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவரது உத்தரவின் பேரில்,குற்றவாளியை தப்ப வைக்க உடந்தையாக இருந்த திமுக கவுன்சிலர் ஆசைத்தம்பி, கவிதாவின் மகன் ஆகாஷ்,ஆசைத் தம்பியின் மகன் அஜய் உட்பட 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு உடைந்ததாக இருந்த 15 க்கும் மேற்பட்ட நபர்கள் குறித்தான தகவல்களை காவல்துறையினர் சேகரித்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய உள்ளனர் .

தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த கவுன்சிலர் ஆசை தம்பியை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்ட நிலையில் ஆசைத்தம்பி தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து போலீசார் கூறும்போது தேவாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குற்றவாளிகளை கைது செய்ய போகும்போது ஒவ்வொரு முறையும் ஆசைத்தம்பி இதே போல ஆட்களை திரட்டி குற்றவாளிகளை கைது செய்ய விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டினர்.

தப்பி ஓடிய கவிதா ஆந்திர மாநிலத்தில் 240 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு,தமிழ்நாட்டில் திருப்பூரில் 340 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு,கோயம்புத்தூரில் 55 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு,தேவாரம் பகுதியில் இரண்டு 5 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு கஞ்சா கடத்தல் வழக்குகளில் தீவிரமாக தேடப்படும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தால் இளம் சிறார்கள் கூட கஞ்சாவுக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டது போல் செயல்பட்டு பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு எதிர்காலத்தை தொலைத்து வரும் நிலையில்,திமுக கவுன்சிலரோ கஞ்சா கடத்தல் குற்றவாளியை தப்பி ஓட விட்டது காவல்துறையினரிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவிதாவுடன் சேர்த்து, ஆசைத்தம்பியையும் கைது செய்தே தீருவோம் என காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!