ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக் கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. CM ஸ்டாலின் மீது EPS பாய்ச்சல்!
Author: Udayachandran RadhaKrishnan24 April 2024, 9:29 pm
ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக் கேட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. CM ஸ்டாலின் மீது EPS பாய்ச்சல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூ நகரை சேர்ந்த வழக்கறிஞர் மாரிசெல்வத்துக்கும், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாம்பு கார்த்திக்கும் இடையே தகராறு இருந்ததாகக் சொல்லப்படுகிறது. பாம்பு கார்த்தி ரேஷன் அரிசி கடத்துவதாகவும் அதுகுறித்து தட்டிக்கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாம்பு கார்த்திக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரேஷன் அரிசி கடத்தி கொண்டு சென்ற வாகனத்தை விருதுநகர் அருகே போலீசார் பிடித்துள்ளனர். இதனால் பாம்பு கார்த்திக் வழக்கறிஞர் மாரிச்செல்வம் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் திங்கள் கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் பாம்பு கார்த்திக் மாரி செல்வத்தை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மறுநாள் அதிகாலையில் பாம்பு கார்த்திக் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கார் மற்றும் பைக்குகளில் மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளனர். மாரி செல்வம் கதவைத் திறந்ததும், அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீட்டுக்கள் வீசியுள்ளது.
மேலும் படிக்க: லீலாவதி கொலையாளிகள் யார்?… தமிழக CPM VS புதுவை CPM!
இதில் அவரது வீட்டின் முன் பகுதியில் உள்ள கிரில் கம்பிகள் வழியாக வீட்டுக்குள் பெட்ரோல் சிதறி விழுந்து பொருட்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
மேலும் வழக்கறிஞர் வீட்டின் அருகே பக்கத்து வீட்டுக்காரர் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. அதுமட்டுமின்றி ஊத்துப்பட்டி சாலையில் ஒரு தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மாரி செல்வம் வாகனத்தையும் அந்தக் கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்து தப்பிச் சென்றுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது X தளப்பக்கத்தில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட விடியா ஆட்சியில் ஏற்கனவே போதைப்புழக்கமும் அதுசார்ந்த குற்றங்களும் சர்வசாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் விடியா ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய பொம்மை முதல்வர் திரு. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வாகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.