கல்யாணம் பண்ணிக்கலாமா? பழைய காதலனை புதுக் காதலனை வைத்து செய்த பலே சம்பவம்!
Author: Hariharasudhan20 March 2025, 5:46 pm
உ.பியில் புதிய காதலன் மூலம் பழைய காதலனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காதலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் கடந்த மார்ச் 14ஆம் தேதி இரவு தில்ஜித் என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இக்கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில், தில்ஜித் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி, கொலை செய்யப்பட்ட தில்ஜித்தின் காதலியைப் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில், காதலி ரம்யாதான் தனது காதலனைத் திட்டமிட்டு தனது வீட்டிற்கு வரும்படி கூறியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், ரம்யா தில்ஜித்தை காதலித்துக் கொண்டே வேறு ஒரு நபரையும் காதலித்து வந்துள்ளார்.
எனவே, பழைய காதலன் தங்களது வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருப்பதற்காக அவரைக் கொலை செய்ய புதிய காதலனோடு சேர்ந்து ரம்யா முடிவு செய்ததுள்ளார். இதற்காக இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். இந்தத் திட்டத்தின்படி, தில்ஜித்திடம் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி தனது வீட்டிற்கு இரவில் வரும்படி ரம்யா தெரிவித்துள்ளார். எனவே, அவரது பேச்சை நம்பி தில்ஜித் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

ரம்யா வீட்டிற்கு பக்கத்தில் வந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தில்ஜித்தை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். இதனைப் பார்த்து தில்ஜித் இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், அவரை விரட்டிச் சென்ற ரம்யாவின் புதிய காதலன், தனது துப்பாக்கியால் தில்ஜித்தை நேருக்கு நேராக சுட்டுக்கொலை செய்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் இக்காட்சிகள் பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க: “இந்தி இசைனு யாராச்சும் கூப்டா இனிமே எனக்கு கெட்ட கோவம் வரும்”… தமிழிசை ஆவேசம்!
மேலும், இந்தக் கொலைச் சம்பவத்தில் வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போதுவரை மூன்று பேரைக் கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.