கூட்டணி தர்மத்தை மதிக்கனும்… அதிமுக – பாஜக இணைந்தே செயல்பட வேண்டும் ; ஜிகே வாசன் வேண்டுகோள்!!

Author: Babu Lakshmanan
8 March 2023, 9:50 pm

பாஜகவும், அதிமுகவும் கூட்டணி தர்மத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை அதன் தலைவர் ஜி.கே வாசன் ஏற்றி வைத்தார். இதில் மாவட்டத்தலைவர் மூர்த்தி, மாநில பொதுசெயலாளர் விடியல் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் தமாகா தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- அதிமுகவும், பாஜகவும் தமிழக மக்களின் நலனை கருதி இணைந்து செயல்பட வேண்டும். இதில் கூட்டணி கட்சிகளுக்குள்ளேயே நிர்வாகிகள் கட்சி மாறுவது சகஜம் தான். இதற்காக விமர்சனங்களை வைக்க கூடாது. தமிழக முதல்வர் ஆட்சியை கலைக்க சதி நடப்பதாக கூறுவது அரசியல் லாபத்திற்காக, எதிர்கால ஓட்டிற்காக.

தமிழக மக்கள் எல்லா தலைவர்களையும் எடை போட்டு வைத்திருக்கிறார்கள். ஆன் லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதால் ஆன்லைன் சூதாட்டத்தை சட்டத்தின் மூலம் மனிதநேயத்துடன், அதனை தடுக்க புதிய சட்டங்களை கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட வேண்டியது தமிழக அரசு. ஆனால் தற்போது அது சரியாக இல்லை.

வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை என்பதை தமிழக அரசின் உளவுத்துறை முன் கூட்டியே அறிந்து அதனை தடுத்திருக்க வேண்டும். அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை தடுத்திருந்தால் பிரச்சனை இவ்வளவு பெரிசாக வளர்த்திருக்காது. பீகாரிலிருந்து குழுக்கள் இங்கு வந்து ஆய்வு செய்வது என்பது தமிழகத்திற்கு தேவையில்லாதது.

ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக எடுத்த நிலங்கள் அதிகம் உள்ளது. தற்போது மத்திய, மாநில அரசுகள் விவசாய நிலங்களை 100 சதவிகிதம் எடுக்க கூடாது. அவ்வாறு எடுப்பதை அப்பகுதி மக்களும் ஏற்கமாட்டார்கள். துப்புரவு பணியாளர்களுக்கு வேலூர் மாநகராட்சி அரசு நிர்ணயித்த தொகையினை வழங்கி, பாதாள சாக்கடை திட்டத்தினை விரைந்து முடிக்க வேண்டும்.

ஈரோடு இடைத்தேர்தல் என்பது மோசமானது. மக்களை பட்டியில் அடைத்து வைத்து தேர்தலை நடத்தியதை போல் வேறு எங்கும் இல்லை. அப்படி இருந்தும் அதிமுக 44 ஆயிரம் ஓட்டுகளை பெற்றது என்பது பெரிய விஷயம் தான். பெண்கள் விவகாரத்தில் பாலியல் பலாத்கார வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் கொலை, கொள்ளை கற்பழிப்பு நாளும் நடக்கிறது. பெண்கள் போதுமான இட பங்கீட்டை அளிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக அதிக இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை உள்ளது. அதை தான் மூன்று மாநில தேர்தல்கள் காட்டுகிறது, என்று கூறினார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!