உலக ஆயுர்வேத விழா 2023… பரிசுகளை வென்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்…!!
Author: Babu Lakshmanan26 December 2023, 4:40 pm
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக ஆயுர்வேத விழாவில் கலந்து கொண்ட ஈஷா சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்கள் சிறந்த படைப்பிற்கான விருதுகள் மற்றும் பரிசுகளை வென்றனர்.
இந்திய மருத்துவ ஞானத்தை கொண்டாடும் வகையில் திருவனந்தபுரத்தில் டிச 1 முதல் 5 வரை நடைபெற்ற உலக ஆயுர்வேத விழா – 2023 இல், ஈஷா சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். 50 நாடுகளில் இருந்து 6000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் ஈஷா சமஸ்கிருதி முன்னாள் மாணவர்களான ருஷ்மிதா மற்றும் தேஜஸ் ஆகியோர் தங்களின் படைப்புகளை வழங்கினர்.
ருஷ்மிதாவின் சித்த நாடி பரிக்-ஷா படைப்பு “சம்ஹிதா மற்றும் சித்தாந்தா” பிரிவில் முதல் பரிசை பெற்றது. இது மொத்தமாக பங்கேற்ற 771 படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 16 படைப்புகளில் ஒன்றாக இடம்பெற்றது.
இதற்கு முன்பு ருஷ்மிதா அவர்கள் கடந்த டிசம்பர் 2022 இல் 1172 நபர்கள் கலந்து கொண்ட ‘உலக ஆயுர்வேதா காங்கிரஸ்’ நிகழ்வில் “இந்திய பாரம்பரிய அறிவியலுடன் ஒருங்கிணைப்பு” என்ற பிரிவில் சிறந்த படைப்பிற்கான விருதை பெற்றார். தேஜஸ் அவர்கள், போபாலில் உள்ள LNCT பல்கலைக்கழகம் ஏப்ரல் 2023 இல் நடத்திய தேசிய அளவிலான கருத்தரங்கில் இரண்டாம் பரிசைப் பெற்றார்.
ருஷ்மிதா அமெரிக்காவில் இயங்கும் செயல்பாட்டு மருத்துவதிற்கான கல்வி நிறுவனத்தில் (IFM, WA, USA) அடிப்படை பயிற்சியை முடித்துள்ளார். இதன் மூலம் செயல்பாட்டு மருத்துவ பழகுனருக்கான சான்றிதழை அவர் பெற்றுள்ளார். இந்த செயல்பாட்டு மருத்துவத்தில் ஒரே அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனமாக IFM திகழ்கிறது. குறிப்பாக இந்நிறுவனத்தில் புகழ்பெற்ற மருத்துவர் மார்க் ஹைமன் அவர்கள் ஒரு பயிற்சியாளராக இருக்கிறார்.