ஜுலை 1ல் கோவை – கவுண்டர் மில்ஸ் மேம்பாலம் திறப்பு… KCP INFRA நிறுவனத்தின் மற்றுமொரு சாதனை – நிர்வாக இயக்குநர் சந்திர பிரகாஷ் பெருமிதம்..!!
Author: Babu Lakshmanan23 June 2023, 2:29 pm
கோவை – கவுண்டர் மில்ஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் திறப்பு தேதி வெளியாகியுள்ளது.
கோவை – மேட்டுப்பாளையம் சாலை எப்போதும் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாகும். எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, கவுண்டம்பாளையம் மற்றும் கவுண்டர் மில்ஸ் பகுதிகளில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கின.
முதற்கட்டமாக கவுண்டம்பாளையம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதையடுத்து, கவுண்டர் மில்ஸ் மேம்பாலம் எப்போது திறக்கப்படும் என்று வாகன ஓட்டிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், கோவை – கவுண்டர் மில்ஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் வரும் ஜுலை 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கவுண்டர் மில்ஸ் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் KCP INFRA LIMITED நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. சந்திரபிரகாஷ் கூறியதாவது ;- 1998ம் ஆண்டு முதல் கட்டுமானப் பணிகளில் எங்களின் தலைசிறந்து விளங்கி வருவதற்கான உதாரணமாக இந்தப் பணிகள் திகழ்கின்றன. மிகப்பெரிய மேம்பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பல்வேறு கட்டுமானப் பணிகளின் மூலம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பங்களிப்பை ஆற்றி வருகிறோம்.
கவுண்டம்பாளையம் மேம்பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடிந்தது. அதேபோல, எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு கவுண்டர் மில்ஸ் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் வந்து, செல்லும் வகையில், சுமார் ரூ.30 கோடி செலவில் 1 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கவுண்டர் மில்ஸ் மேம்பாலக்க கட்டுமானப் பணிகளில் மிகப்பெரிய சவால்கள் இருந்தன. நெருக்கடியான இடம் உள்பட பல்வேறு சவால்கள் இருந்தும், அதனை எங்களின் அனுபவமிக்க என்ஜினியர்களின் சாமர்த்தியத்தாலும், புதுவிதமான தொழில்நுட்பங்களின் மூலம், உரிய நேரத்திற்குள் இந்தம் மேம்பாலம் திறம்பட கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். கவுண்டர் மில்ஸ் மேம்பாலம் KCP INFRA LIMITED நிறுவனத்தின் மற்றொருமொரு சாதனையாகும், எனக் கூறினார்.