3,174 ஏக்கரில் உருவாகும் சிப்காட்.. தரிசு நிலம் என போராட்டத்தில் குதித்த விவசாயிகள் மீது குண்டாஸ்.. திமுக அரசுக்கு கண்டனம்!
Author: Udayachandran RadhaKrishnan16 November 2023, 4:54 pm
3,174 ஏக்கரில் உருவாகும் சிப்காட்.. தரிசு நிலம் என போராட்டத்தில் குதித்த விவசாயிகள் மீது குண்டாஸ்.. திமுக அரசுக்கு கண்டனம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் ‘சிப்காட் 3-வது அலகு விரிவாக்கம்’ செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் வேளாண் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.
அரசை பொறுத்தவரையில் இந்த நிலம் தரிசு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு நெல், மணிலா, கரும்பு, கேழ்வரகு, பூக்கள் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அரிசி திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்துதான் வருகிறது.
அரசு சொல்வதை போல இது தரிசு நிலம் கிடையாது என்றும், இது வேளாண் நிலம் என்று கூறி திருவண்ணாமலை மக்கள் ‘மேல்மா சிப்காட்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக 72 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும் விவசாயிகள் 125 நாட்கள் கடந்தும் தற்போது வரை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இப்படி இருக்கையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து இது குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. இதில், பச்சையப்பன் என்பவர் ஒரு “குண்டர்” எனத் தீர்மானித்து அவரை பார்வையில் கானும் இவ்வலுவலக ஆணையின்படி 1982-ம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் குடிசைப்பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் எண். 14/1982)-ன் கீழ் அவர் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதி பராமரிப்பிற்கு குந்தகமாக செயல்படுவதைத் தடுக்கும் பொருட்டு மதுரை மத்தியச் சிறையில் தடுப்புக்காவலில் 15.11.2023 முதல் வைக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதில் 7 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதனை விட்டுவிட்டு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்றும் வலியுறுத்தியுள்ளார்.