‘பஸ் லேட்டா தான் வரும்… இஷ்டம் இருந்தா ஏறு’… கல்லூரி மாணவர்களிடம் நடத்துநர் அலட்சியப் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
14 July 2023, 11:38 am

நானே ஏழு நாளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன் என்று அரசு பேருந்து நடத்துநர் மாணவர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்து மருத கோன் விடுதி அரசு கல்லூரி வழியாக சென்று வருகிறது. இந்த பேருந்தில் தான் மருத கோன் விடுதி கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் செல்வார்கள். இந்த நிலையில், தொடர்ந்து இந்த பேருந்து மதியம் 2 மணிக்கு வர வேண்டியது 3:00 மணிக்கு தான் வந்து கொண்டுள்ளது.

நேற்று அதே போன்று பேருந்து லேட்டாக வந்தபோது, மாணவிகள் அடித்து பிடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். ஆனால், மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

‘தொடர்ந்து பேருந்து லேட்டாக வருவதால் நாங்கள் அவதிப்படுகிறோம். சீக்கிரம் வந்தால் என்ன..?’ என்று மாணவர்கள் கேட்டபோது, ஓட்டுநர் முறையாக பதிலளிக்கவில்லை. இதனை தொடர்ந்து, மாணவர்கள் நடத்துனரிடம் சென்று கேட்டபோது, ‘ஓட்டுநர், நடத்துனர் ஆள் இல்லை, அதனால் பேருந்து லேட் ஆக தான் வரும். இஷ்டம் இருந்தால் ஏறுங்கள், இல்லையில் அடுத்த பேருந்தில் ஏறுங்கள்,’ என்று கூறியதோடு, நானே ஏழு நாளாக தொடர்ந்து பேருந்தில் பணியாற்றி வருகிறேன். என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள். வேண்டுமென்றால் பஸ்சை மறித்து போடுங்கள் என்று மாணவர்களோடு சரிக்கு சமனாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து பேருந்து நிலைய அலுவலர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்து பேருந்து ஒரு வழியாக அனுப்பி வைத்தனர். கூடுதல் பேருந்துகளை குறிப்பாக கல்லூரி மாணவர்கள் செல்லும் நேரத்திலும், வீடு திரும்பும் நேரத்திலும் இயக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!