ஸ்டிரைக்கில் போக்குவரத்து ஊழியர்கள்.. வாணியம்பாடி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு.. ; ஆலங்காயம் போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
10 January 2024, 1:53 pm

வாணியம்பாடி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாணியம்பாடி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் பணிமனையில் இருந்து வெள்ளைகுட்டை , ஆலங்காயம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செல்லும் (TN.23 N 2013) எண் கொண்ட அரசு பேருந்து நேற்றிரவு போளூர் சென்று 10க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு ஆம்பூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தது.

பேருந்தை ஓட்டுநர் ரவி மற்றும் நடத்துனர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியில் மர்ம நபர்கள், அரசு பேருந்தின் மீது கல் வீசியதில் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இது குறித்து பேருந்து ஓட்டுனர் ரவி ஆலங்காயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடி உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 629

    0

    0