கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை?.. அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேட்டி..!

Author: Vignesh
24 August 2024, 2:45 pm
Quick Share

அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் வசதி இல்லை என்பது தவறான செய்தி, பயிற்சி மருத்துவர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் சரிசெய்யபட்டு வருகிறது என அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேட்டியளித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,கடந்த 14ஆம் தேதி அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீற முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பயிற்சி மருத்துவர்கள் கழிப்பிடம், அடிப்படை வசதிகள் கோரிக்கை வைத்தனர்.

அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.மருத்துவமனை வளாகத்தில் 250 சிசிடிவி கேமராக்கள் உள்ளது. ஒரு சில சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை அதை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனையில் விளக்கு இல்லை என்றார்கள் அது முழுமையாக சரிசெய்யபட்டது. கழிப்பிடம் வசதி இல்லை என்று தவறான செய்திகள் பரப்பி வருகின்றனர்.

அது உண்மை இல்லை. 5,6 இடங்களில் கழிப்பிடம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதே போல மருத்துவமனையில் பாதுகாப்பு உறுதி செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசு மருத்துவமனையில் பழைய கட்டிடம் என்பதால் அங்கு ஒரு சில குறைபாடுகள் உள்ளது. உடனடியாக குறைபாடுகளை சரி செய்து வருகிறோம். மருத்துவமனை வளாகத்தில் சாலை, பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

இந்த பணிகள் நடைபெற்றால் சீக்கிரம் தீர்வு கிடைக்கும். பார்கிங் வாகனங்கள் நிறுத்துவதால் மருத்துவமனை வளாகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதை தவிர்க்கும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் நோயாளிகளை பார்வையிட 4 – 6 மணி வரைக்கும் தான் பார்வையாளர்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் உடன் 2பேர் தான் உள்ளே இருக்க வேண்டும். குடும்ப நபர்கள் அனைவரும் தங்குவது தவறு. அதை தவிர்க்க வலியுறுத்தி வருகிறோம். தற்போது இந்த சம்பவத்திற்கு பின் மருத்துவமனை வளாகத்தில் காவல்துறை ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை கோவையில் குரங்கும்மை நோய் யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.சிகிச்சைக்கு தேவையான வசதிகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 149

    0

    0