மனுநாள் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகள்… உடனே ஆக்ஷனில் இறங்கிய கலெக்டர் ; மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan16 October 2023, 3:43 pm
தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கையால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைகளுக்கான மனு பெரும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த வாரம் திங்கட்கிழமை மக்கள் அதிக அளவு கொடுப்பதற்காக வந்திருந்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டது.
இதற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததே மக்களின் கூட்டம் அதிகரிக்க காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு மக்களிடையே இருந்து வந்தது.
இந்த நிலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் பெறப்பட்ட மனுக்களை அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து தீர்வு காணப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதற்காக வரவேண்டிய அதிகாரிகள் காலை 9.30 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும்.
ஆனால், காலதாமதமாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் கூட்டரங்கிற்குள் உள்ளே வரக்கூடாது என கூறியுள்ளார். இதனால் தற்போது ஒன்னரை மணி நேரத்திற்கு மேலாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் அதிகாரிகள் உள்ளே வரவிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்து சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைந்த அதிகரிகளை கொண்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.