மனைவியின் நினைவு சின்னமாக மாறியது அரசு நீர்தேக்க தொட்டி : ஷாஜகானாக மாற முயன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan7 June 2022, 2:18 pm
விழுப்புரம் : அரசு நிலத்தில் சொந்த செலவில் கட்டியதாக கூறி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியே நினைவு சின்னமாக மாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் வினோத செயலால் இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்படும் நிலையில் அந்த ஓவியத்தை அரசு சார்பில் அழிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கானை அருகே உள்ளது கானைக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக தலைவர் பதவி வகித்தவர் கிருஷ்ணராஜ். தன் பதவி காலத்தில் 2010ம் ஆண்டு இந்த கிராமத்தில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றை அரசு இடத்தில் கட்டி உள்ளார்
.
இதற்கு அரசின் சார்பில் முறையாக எந்தவித அனுமதியும் வாங்காமல் கட்டியதாக கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து 2 லட்சம் மதிப்பிலான இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த அரசு நிலத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 2010ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணராஜ் மனைவி புஷ்பா இறந்து ஓராண்டு ஆன நிலையில் தான் கட்டிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனைவி புஷ்பாவின் பெயரை வைத்து இறந்த அவரது மனைவியின் புகைப்படத்தை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மேல் வரைந்து முதலாம் ஆண்டு நினைவஞ்சலி வாசகத்தை எழுதியுள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பையும் விவாதப் பொருளாக மாறியது.
அரசு நிலத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி வாசகம் எழுதியதையும் அந்த நீர்த்தேக்க தொட்டிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனைவியின் பெயரை சூட்டியது இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு பிரிவினரின் முன்னாள் தலைவர் மனைவியின் பெயரையும் புகைப்படத்தையும் அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அரசு தலையிட்டு அந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து படத்தை அழிக்குமாறு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பஞ்சாயத்து செயலாளர் மற்றும் தலைவர் அந்த ஓவியத்தை அழித்தனர்.
ஷாஜகான் தன் காதலிக்காக தாஜ்மகால் கட்டினான், விழுப்புரத்தில் மனைவி மேல் இருந்த பாசத்தில் மனைவியை மிக உயரமான இடத்தில் வைத்து பார்க்க ஆசைப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தன் மனைவியின் பெயரை வைத்து தன் அதீத பாசத்தை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.