அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து… மாணவன் படுகாயம்… அரசின் அலட்சியமா..? பெற்றோர்கள் அதிருப்தி..!!
Author: Babu Lakshmanan27 October 2022, 1:37 pm
திருவாரூர் அருகே அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 623 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து சிமெண்ட் காரை விழுந்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் தயாளன் என்ற மாணவருக்கு தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, மாணவனை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பள்ளி ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் சேதமடைந்து உள்ள நிலையில், வேறு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே, தமிழக அரசு பள்ளியில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை உடனடியாக இடித்து விட வேண்டும் என கூறியுள்ள நிலையில், ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்கு தரமற்ற நிலையில் உள்ள கட்டிடத்தை இதுவரை இடிக்காதது ஏன்..? என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உடனடியாக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் பெற்றோர்கள் வைத்துள்ளனர்.