அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்… 18 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
Author: Babu Lakshmanan30 January 2024, 10:51 am
அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு சாப்பிட்டு வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடியை அடுத்த சோழங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது பள்ளியில் 22 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் நேற்று மதியம் வெஜிடபிள் பிரியாணியும், முட்டையும் சத்துணவு அமைப்பாளர் சபியா பேகம் மற்றும் சமையலர் விமலா ஆகியோரால் தயார் செய்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. பள்ளிக்கு வந்திருந்த 19 குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டனர்.
மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் மாலை வீடு திரும்பியவுடன் சத்துணவு சாப்பிட்ட ஒரு குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஒருவர் பின் ஒருவராக குழந்தைகள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளான கவின் (6) பிரதீப் (10) அர்ஜுன் (10) அஜய் (10) சாஜனா (11) சௌந்தர்யா 10 திவ்யா( 8) சுபஸ்ரீ (8) ஜெயஸ்ரீ(10) தேவகா (7) கோபிகாஸ்ரீ( 7) லட்சயா (8) சபரிவாசன்( 9) தீபா(8) பிரித்திகா (10) நாவரசன் (10) அரவிந்த் (7) கவியரசன் (9) உள்ளிட்ட 18 குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேரில் ஒரு குழந்தை மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மற்ற குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.