சீருடையுடன் பேக் மாட்டிக்கொண்டு பைக்கை திருடும் பள்ளி மாணவர்கள் : வெளியான சிசிடிவி காட்சி… அதிர்ச்சியில் ஆசிரியர்கள்..!!

Author: Babu Lakshmanan
11 March 2023, 11:01 am

பள்ளி சீருடையுடன் பேக் மாட்டிக் கொண்டு இருசக்கர வாகனத்தை திருடும் பள்ளி மாணவர்களின் சிசிடிவி காட்சியை கண்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகரில் சமீப காலமாக இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடு போகின்றன. குறிப்பாக அரசு தலைமை மருத்துவமனை, ரயில் நிலையம், வணிக ஸ்தலங்கள் அதிகம் உள்ள காந்தி ரோடு, பிள்ளையார்பாளையம், புறநகர் பகுதியான செவிலிமேடு, ஓரிக்கை போன்ற பல பகுதிகளில் கண்காணிப்பு கேமரா இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் இரு சக்கர வாகனங்களை திருடி கொண்டு செல்வது அதிகரித்து வருகின்றது.

அதிலேயும் வீட்டின் வெளியே சைடு லாக் போட்டுவிட்டு செல்கின்ற வாகனங்களும் திருடு போவது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த கிஷோர் என்பவர் காட்டங்குளத்தூரில் உள்ள SRM கல்லூரியில் பயின்று வருகிறார். தினந்தோறும் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையத்தில் நிறுத்தி விட்டு ரயில் மூலம் கல்லூரிக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மாயமாகியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிவகாஞ்சி காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில் பள்ளி சீருடையுடன் புத்தக பை மாட்டிக்கொண்டு வந்த இரண்டு சிறுவர்கள் பைக்கை திருடி கொண்டு செல்வதை கண்ட காவல்துறையினர் பைக்கை திருடி சென்ற 2 சிறுவர்களையும் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாகவே இருசக்கர வாகனத்தை திருடும் மர்ம நபர்கள், இளைஞர்களாகவோ, நடுத்தர வயதை கடந்தவராகவோ இருப்பார்கள்.

ஆனால் கல்லூரி மாணவரான கிஷோரின் பைக்கை திருடியவர்கள் யூனிபார்ம் அடைந்த பள்ளி சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பைக் திருட்டில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதை கேள்விப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடையே மிகுந்த கலக்கம் ஏற்பட்டது.

சிசிடிவி காட்சியை வைத்து சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து யூனிபார்மை வைத்து ஒவ்வொரு பள்ளியாக ஏறி இறங்கி வருகின்றனர்.

அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாகனங்கள் திருடு போவதை தடுக்க அரசு தலைமை மருத்துவமனை நுழைவாயிலேயும் ரயில்வே நிலையத்தின் பார்க்கிங் இடம், காந்தி ரோடு போன்ற நெருக்கமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து காவலரை நியமித்து வாகன திருட்டை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?