ஒருநாள் தலைமை ஆசிரியராக 20 வாய்ப்பாடே தகுதி.. தலைமையாசிரியரின் அதிரடி ஆஃபர்… மகுடம் சூடிய 5ம் வகுப்பு மாணவி..!!

Author: Babu Lakshmanan
6 July 2022, 5:10 pm

திருவாரூர் : வாய்ப்பாடு சொன்னால் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரச் செய்வதாக வெளியாகிய அறிவிப்பை தொடர்ந்து, சாதித்து காட்டிய ஐந்தாம் வகுப்பு மாணவியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள மெய்பொருள் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி, கடந்த வெள்ளிக்கிழமை தங்களது பள்ளியில் நடைபெற்ற காலை வழிபாட்டுக் கூட்டத்தில் ஒரு அறிவிப்பை மாணவ மாணவிகளிடம் தெரிவிக்கிறார். அதில் விடுமுறை நாளான சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் ஒன்றிலிருந்து 20வது வாய்ப்பாடு வரை படித்து மனனம் செய்து திங்கட்கிழமை அன்று வந்து ஒப்பிக்கும் மாணவ, மாணவிகள் தனது தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரலாம் என்று கூறுகிறார். 

அவ்வாறு படித்து யார் எனது இருக்கையில் அமர விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒட்டுமொத்த பள்ளியின் மாணவ, மாணவிகளும் கையை உயர்த்தி உள்ளனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் பருத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவரான சதீஷ் பானுமதி தம்பதியினரின் மகள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சபிதா என்பவர், இருபதாவது வாய்ப்பாடு வரை இரண்டு நாட்களுக்குள் படித்து மனனம் செய்து ஒப்பித்துள்ளார். 

இதனையடுத்து, தலைமை ஆசிரியர் சுமதி வகுப்பு ஆசிரியர் ராதிகா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவி சபிதாவை தலைமையாசிரியர் அறைக்கு அழைத்து சென்று இருக்கையில் அமர வைத்து கிரீடம் அணிவித்து அவரை பாராட்டியுள்ளனர். சக வகுப்பு மாணவ, மாணவிகளின் கைத்தட்டலோடு தலைமையாசிரியர் இருக்கையில் கம்பீரமாக அமர்ந்த அந்த மாணவி கண்கள் மகிழ்ச்சியில் கலங்கின.

இந்த காட்சியை வீடியோ எடுத்து தலைமை ஆசிரியர் சுமதி மற்ற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் இருக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜெய் பீம் படத்தில் வருவது போன்று மாணவி சபிதா தலைமையாசிரியர் இருக்கையில் தயக்கத்தோடு அமர்ந்து பின்பு கம்பீரமாக கிரீடத்துடன் அமரும் காட்சி மாணவிக்கு மட்டுமல்லாது இந்த காட்சியை பார்க்கும் அனைவருக்கும் ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் என்று கூறலாம். 

இது குறித்து சபிதா கூறுகையில், “எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருப்பதாகவும் தெரிவித்தார். தலைமையாசிரியர் இயற்கையில் அமர்ந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறினார்.

தலைமை ஆசிரியர் சுமதி கூறுகையில், “மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடனும், கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையிலும் இதனை செய்ததாக கூறினார். அதே போன்று அனைத்து மாணவர்களும் எனது இருக்கையில் ஒரு நாள் அமர்ந்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்து படிக்க வேண்டும்,” என்று கூறினார். 

https://vimeo.com/727350564
  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!