போக்குவரத்து நிர்வாகி கொலை வழக்கு… முன்னாள் திமுக நிர்வாகிக்கு 2 நாள் போலீஸ் காவல் ; நீதிமன்றம் உத்தரவு
Author: Babu Lakshmanan1 February 2024, 9:46 pm
கன்னியாகுமரி அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகியும், வழக்கறிஞருமான ரமேஷ்பாபுவுக்கு போலீசார் 2 நாள் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த இவர், மைலோடு புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய கணக்கு வழக்கு கேட்டது தொடர்பான முன் விரோதத்தில் கடந்த 20ம் தேதி பாதிரியார் இல்லத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய இரணியல் போலீசார், பாதிரியார் ராபின்சன், முன்னாள் திமுக நிர்வாகி ரமேஷ்பாபு உட்பட 13 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். பாதிரியார் ராபின்சன் திருசெந்தூர் நீதிமன்றத்திலும் முன்னாள் திமுக நிர்வாகியும், வழக்கறிஞருமான ரமேஷ்பாபு நாகப்பட்டினம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
இன்று முன்னாள் திமுக நிர்வாகி ரமேஷ்பாபு இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை இரணியல் போலீசார் 2-நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அமீர்தீன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து, போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.