ஆளுநருக்கு கருப்புக்கொடி…போராட்டக்காரர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. அனைவரும் இரவில் விடுதலை…!!

Author: Babu Lakshmanan
20 April 2022, 8:57 am
Quick Share

மயிலாடுதுறை : மயிலாடுதுறைக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி ஏந்தி போராட்டம் நடத்திய 89 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரவு விடுதலை செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் திருக்கடையூர் ஶ்ரீஅபிராமி அம்மன் உடனாகிய ஶ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து, மன்னம்பந்தல் வழியாக காலை 10 மணிக்கு தருமபுர ஆதீனத்தை வந்தடைந்தார்.

அப்போது மன்னம்பந்தல் தனியார் கல்லூரி அருகே தமிழக ஆளுநர் செல்லும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும், மசோதாக்களுக்கும் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் இடத்தை ஆளுநர் காரில் கடக்கும்போது, போராட்டக்காரர்களுக்கு ஆளுநர் செல்வது தெரியாமல் இருக்க காவல்துறை வாகனத்தை கொண்டு வந்து போலீசார் நிறுத்தினர்.

இதனால் போராட்டக்காரர்கள் கையில் வைத்திருந்த கருப்புகொடிகளையும், பதாகைகளையும் வீசி எரிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மன்னம்பந்தலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், சேதத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இரவு 9 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • sarathkumar latest news நடுரோட்டிற்கு வந்த சரத்குமார்…வைரலாகும் வீடியோவால் பரபரப்பு..
  • Views: - 1234

    0

    0