ஆளுநர் இப்படி செய்றது நினைச்சா? கோவையில் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த சத்யராஜ் உருக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 ஏப்ரல் 2023, 8:14 மணி
கோவை வஉசி மைதானத்தில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற முதல்வரின் புகைப்பட கண்காட்சி வருகின்ற 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை நடிகர் சத்யராஜ் திறந்து இன்று வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த புகைப்பட கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்கள், கட்சி சார்ந்த புகைப்படங்கள், அரசியல் நிகழ்ச்சிகள், முதல்வர் அறிவித்த திட்டங்கள் குறித்தான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் எம்ஜிஆர் உடன் மு.க.ஸ்டாலின் இருந்த புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மேலும் பல்வேறு உருவ சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மிசா வழக்கில் கைது செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் சிறையில் இருந்த காட்சி உருவ சிலைகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியை பார்வையிட்ட சத்யராஜ் கண்காட்சி குறித்தான கருத்து பதிவேட்டில், “வரலாற்று நாயகனை பற்றிய வரலாறை அறிந்து பெருமிதத்தோடு மகிழ்ந்தேன். வாழ்க திராவிட மாடல்- மாண்புமிகு முதல்வருக்கு வாழ்த்துக்கள்” என்ற கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த சத்தியராஜ், சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் இந்த புகைப்படம் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அழைத்தார்கள் போக முடியவில்லை, தற்போது கோவையில் இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அழைத்தார் வரவேண்டிய சூழ்நிலை வந்தது.
நேரில் இந்த கண்காட்சியை பார்த்துள்ளேன். கோவையில் போடப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சி மிகச்சிறப்பாக இருந்தது. முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்தது முதல் அனைத்து புகைப்படமும் இங்கு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என அடிக்கடி கூறுவார்கள். ஆனால் இங்கு மிசாவில் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையுடன் இங்கு சாட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் அனைத்தும் சான்றிதழ்களோடு இங்கு வைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் என்னை கவர்ந்த புகைப்படம் முதல்வர் ஸ்டாலின், கலைஞர் வேடமிட்டு பிரச்சார நாடகத்தில் நடித்துள்ளார், எம்ஜிஆர் அதனை பாராட்டியுள்ளார்.
இது திராவிட இயக்க வரலாறு சித்தாந்தத்தின் தெளிவு இந்த புகைப்படம் என கூறினார். இரண்டு ஆண்டு திமுக ஆட்சி மிகவும் திருப்திகரமாக உள்ளது.
நடுத்தர மக்கள் அவர்கள் கீழே இருப்பவர்களுடன் பேசுவேன் அவர்கள் திருப்திகரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்கள். எந்த ஆட்சி வந்தாலும் நாங்கள் திருப்தியாக தான் உள்ளோம்.
ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதில்லை ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை. நல்ல காரியத்திற்கு நல்ல திட்டத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அதற்கு அவர் ஆதரவாக செயல்பட வேண்டும் மக்கள் நலமே முக்கியம் அதனை மனதில் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், மனிதாபிமானத்தோடு ஆளுநர் அணுக வேண்டும்.
சூதாட்டத்தில் பல உயிரிழப்பு ஏற்படுகிறது, சூதாட்டம் நல்லது அல்ல. மேலும் இந்த புகைப்பட கண்காட்சியை கோவை மக்கள் அனைவரும் இங்கு வந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார். 14ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0