மாணவர்களிடம் மனஉளைச்சலை ஏற்படுத்தும் அரசு உதவி பெறும் பள்ளி : மதிப்பெண் கேட்டு பள்ளிக்குள் அனுமதிக்கும் காவலாளி!!
Author: Udayachandran RadhaKrishnan22 May 2023, 6:18 pm
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சரவணவேலு மற்றும் சாதனாதேவி இருவரும் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சாதனாதேவி பத்தாம் வகுப்பு அவினாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளியிலும், அதேபோல அவரது மகன் சரவண வேலு ராமலிங்க செட்டியார் பள்ளியில் படித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனா தேவி 260 மதிப்பெண்களும் சரவண வேலு 269 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் ராமநகர் பகுதியில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க மகனையும் மகளையும் அழைத்து வினோத் வந்துள்ளார்.
ஆனால் பள்ளியின் தரப்பில் தங்களது பள்ளியில் படித்த மாணவர்களை சேர்த்த பிறகு வேறு பள்ளியில் படித்தவர்களை சேர்க்க உள்ளதாகவும், இரண்டு நாட்கள் கழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று பள்ளியின் காவலாளி , பள்ளியில் +1 சேர வரும் மாணவர்களை மதிப்பெண்களை கேட்ட பிறகே உள்ளே அனுமதித்துள்ளார்.
மதிப்பெண் குறைவாக இருந்தால் வெள்ளிகிழமை வருமாறு கூறியதால், பள்ளியில் சேர வந்த மாணவர்களும் பெற்றோரும் வேதனையுடன் திரும்பினர்.
மாணவர்களுக்கு மன அழுத்தை கொடுத்து விடக்கூடாது என கருதி அரசு முதல் மதிப்பெண்கள் அறிவிப்பை ரத்து செய்து வரும் நிலையில், பள்ளியில் சேர வந்தவர்களிடம் காவலாளியே மதிப்பெண் தெரிந்தால் தான் உள்ளே அனுமதிப்பதாக கூறுவது மாணவர்களிடையே நெருடலை உருவாக்கியுள்ளது.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா கூறும்போது தங்களது பள்ளியில் 191 பேர் பிளஸ் ஒன் படிக்க உள்ளனர் ஆகையால் முதலில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும், தங்களது பள்ளியின் படித்த மாணவர்களின் சேர்க்கை முடிந்த பிறகு இரண்டு நாட்களுக்கு பிறகு மற்றவர்கள் சேர்க்கபடுவார்கள் என விளக்கம் அளித்தார்.
உயர்நிலை பள்ளியில் படித்த மாணவர்கள் மேல் நிலை பள்ளியில் சேர்வதற்காக செல்லும் போது, இதுபோன்ற சங்கடத்தை சந்திக்கின்றனர்
என்பது குறிப்பிட்டத்தக்கது.