மலைகிராமத்துக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு.. தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan12 September 2022, 11:00 am
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 10 நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசு பேருந்து வெள்ள நீரில் சிக்கியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில்
அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடம்பூரிலிருந்து சத்தியமங்கலம் செல்ல ஆபத்தான கரடு முரடான மண் சாலையில் இரண்டு காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கடந்த சில நாடகளாக மாக்கம்பாளையம் வனப்பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருவதால் குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரைப்பள்ளம் ஆகிய 2 பள்ளங்களில் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக மாக்கம்பாளையம் செல்லும் அரசு பேருந்து சர்க்கரை பள்ளத்தை கடக்க முற்பட்டபோது பள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் காரணமாக பேருந்து பள்ளத்தை கடக்க முடியாமல் பாதியிலேயே நின்றது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், பெரிய பெரிய கற்கள் இருந்ததால் இடிபாட்டில் சிக்கிய பேருந்து நகர முடியாமல் பாதி வழியிலேயே நின்று போனது.
நேற்றைய தினம் சர்க்கரை பள்ளத்தைத் தாண்டி மாக்கம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சென்றவர்கள் திரும்பி வரும் போது சர்க்கரை பள்ளத்தில் சென்ற காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது போல இன்றும் அரசு பேருந்து சிக்கிக்கொண்டது.
கிராம மக்கள் ஒன்று சேர்ந்து டிராக்டர் மற்றும் ஜே.சி.பி இயந்திரங்களை வரவழைத்து முன் பகுதியில் டிராக்டரில் கயிறு கட்டியும், பின் பகுதியில் ஜேசிபியை வைத்து தள்ளியும் மூன்று மணி நேரத்திற்கு பிறகு அரசுப் பேருந்தை போராடி, மீட்டு கரை சேர்த்தனர்.
மழை காலங்களில் இந்த காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போதெல்லாம், போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுவது, தொடர் கதையாகவே உள்ளது.
குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரை பள்ளம் என இரண்டு காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டடு வரும் நிலையில், விரைவில் பாலம் கட்டுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.