அரசு பள்ளியில் தீ… விடைத்தாள்கள் எரிந்து நாசம் : திட்டமிட்டே தீ வைத்த மர்மநபர்கள்? போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan21 October 2023, 9:52 pm
அரசு பள்ளியில் தீ… விடைத்தாள்கள் எரிந்து நாசம் : திட்டமிட்டே தீ வைத்த மர்மநபர்கள்? போலீசார் விசாரணை!!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 178 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் ஆசிரியர்கள் ஓய்வறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 6 மற்றும் 10ஆம் வகுப்பு வரையிலான விடைத்தாள்கள் ஒரு அறையிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் மற்றொரு அறையிலும் வைக்கப்பட்டிருந்தது.
விடுமுறை நாளான இன்று மர்ம நபர்கள் சிலர் அருகருகில் அமைந்துள்ள இரண்டு அறைகளிலும் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்களுக்கு தீ வைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் விடைத்தாள்கள் உள்ளிட்ட சில ஆவணங்கள் எரிந்து கருகின.
மேலும், நாற்காலி மற்றும் மேசைகளும் எரிந்து சேதமாகின. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.