கோவையில் பிரதமர் ரோடு ஷோ நடத்த க்ரீன் சிக்னல்.. நீதிமன்றம் படியேறிய பாஜக : நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan15 March 2024, 6:45 pm
கோவையில் பிரதமர் ரோடு ஷோ நடத்த க்ரீன் சிக்னல்.. நீதிமன்றம் படியேறிய பாஜக : நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு!
கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் (ரோடு ஷோ) பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது. இதற்கு எதிராக கோவை மாவட்ட பாஜக சார்பில் சென்னை உயநீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்ற நிலையில், பேரணிக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினார்.
அப்போது காவல்துறை தரப்பில் கூறியதாவது, தேர்வு நாள் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கவில்லை. அதுமட்டுமில்லாமல், பிரதமருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தாலும் அனுமதி மறுத்திருப்பதாக விளக்கமளித்தது. இதையடுத்து, இந்த மனு மீதான உத்தரவு இன்று மாலை பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோவையில் வரும் 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ‘ரோடு ஷோவுக்கு’ அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். அதாவது, கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகன பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேரணி செல்லும் வழி, தொலைவு மற்றும் நேரம் ஆகியவற்றை கோவை காவல்துறையினரே முடிவு செய்யலாம் என்றும் பேரணி செல்லும் பகுதிகள், சாலைகளில் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிபந்தனை விதித்துள்ளார். வரும் 18ம் தேதி பிரதமர் மோடியின் வருகையின்போது கோவையில் 4 கிமீ தூரத்துக்கு ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் பாஜக அனுமதி கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.