கருவைக் கலைத்துவிடு.. காசு தாரோம்.. ஜிம் ஓனரின் தாய் டீல்.. பெண் விபரீத முடிவு!
Author: Hariharasudhan1 March 2025, 8:00 pm
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவர், தனது கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். அப்போது, ஜிம் உரிமையாளரான பத்மகுமரன், அப்பெண்ணிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
இந்தப் பழக்கத்தின் அடிப்படையில், பத்மகுமரனுக்கு புதிய ஜிம் தொடங்க அந்தப் பெண் ரூ.38 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, இந்தப் பணத்தை வைத்து செட்டிமண்டபம் பகுதியில் புதிய ஜிம் ஒன்றையும் பத்மகுமரன் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.
இதனிடையே, அந்த பெண்ணுடன் பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். ஆனால், இந்த விஷயம் தெரிந்ததும் அந்தப் பெண்ணுடன் பேசுவதை பத்மகுமரன் நிறுத்தியுள்ளார். எனவே, இது குறித்து பத்மகுமரனின் தாயாரிடம் பேசியுள்ளார்.
அதற்கு அவர், “கருவைக் கலைத்துவிடு. என் மகன் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுத்து விடுகிறோம்” எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பத்மகுமரன் மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பெண்ணிடம் வாங்கிய ரூ.38 லட்சம் பணத்தை பத்மகுமரன் திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!
மேலும், பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகவும் பத்மகுமரன் அளித்த உறுதியின் பேரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, சுவாமிமலை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்தப் பெண்ணை வரவழைத்துள்ளார்.
பின்னர், அங்கு வந்த அப்பெண்ணிடம், கர்ப்பத்தைக் கலைத்து விடு, இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பத்மகுமரனைக் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.