‘திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத்தானே செய்யும்..’ அப்பாவுக்கு அண்ணாமலை கண்டனம்!
Author: Hariharasudhan21 January 2025, 1:42 pm
‘என் தம்பி ஞானசேகரன்’ என சபாநாயகர் அப்பாவு பேசியதாக வீடியோ வைரலான நிலையில், அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை: இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை சட்டப்பேரவைத் தலைவர் தம்பி என்கிறார். இதே திமுகவினர் ஆளுநரை எப்படி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி இழிவுபடுத்துகின்றனர். திமுக எவ்வளவு தரம்தாழ்ந்த கட்சி என்பதை புரிந்து கொள்வோம்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, அங்கிருந்த ஞானசேகரன் என்ற நபரைக் கேலி செய்ய, அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனைக் குறிப்பிட்டு, “தம்பி ஞானசேகரன்” என்று பேசியுள்ளார்.
திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத் தானே செய்யும். தன்னை அறியாமல் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. பாலியல் குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரனுக்குப் பக்கபலமாக இருந்த அந்த “சார்” யாரென்று, இன்று வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.
தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவு அவர்களே?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: விஜய், அஜித் பட தயாரிப்பாளர்கள் இடங்களில் ஐடி ரெய்டு.. பரபரப்பில் டோலிவுட்!
இந்த நிலையில், திமுக தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “கள்ளக்கூட்டணியில் உள்ள அதிமுகவும் பாஜகவும் பொய் செய்திகளை பரப்புவதே தங்களின் அடிப்படை கொள்கையாக வைத்துள்ளனர். அதிமுக மாணவரணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் எடிட் செய்யப்பட்ட விடியோவை வெட்கமின்றி சங்கிகள் போன்று பதிவிட்டுள்ளனர்.
அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு என்று அனைவரும் கேட்க தொடங்கியதால் தங்கள் உடம்பில் ஓடுவது வன்மமும் காழ்ப்புணர்ச்சியும் தான் என்று அதிமுக அடிமைகள் நிரூபித்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.