சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுங்க : தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா வலியுறுத்தல்!!
Author: Udayachandran RadhaKrishnan16 September 2022, 8:09 pm
குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.
குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளரை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற முத்துக்குமரன் ஈவு இரக்கமின்றி இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டு துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த மோசமான நடவடிக்கையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
முத்துக்குமரன் வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பதாலும், அவரது மனைவி பட்டப்படிப்பு படித்துள்ளதாலும், தமிழக அரசு முத்துக்குமரனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
முத்துக்குமரன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி குவைத் நாட்டில் உள்ள பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு வேலை அளித்த உரிமையாளருக்கு உரிய உச்சபட்ச தண்டனை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.