கைத்துப்பாக்கியால் கைவிலங்கு.. பிரபல ரவுடியால் சிக்கிய பாஜக நிர்வாகி மீது குண்டர் சட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2024, 12:42 pm

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சத்யா என்கிற சீர்காழி சத்யா (41). இவர் பிரபல ரவுடியாக உள்ளார்.

இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழிப்பறி திருட்டு பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் தான் சீர்காழி சத்யா பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே சீர்காழி சத்யாவை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் 28 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவருடைய கூட்டாளிகளான மாரிமுத்து, பால்பாண்டி ஆகியோரும் சிக்கினர். இதையடுத்து அவர்களின் கார், வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சீர்காழி சத்யா வைத்திருந்த கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், பட்டா கத்தி உள்ளிட்டவை சிக்கின. இதையடுத்து கைத்துப்பாக்கி பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கைத்துப்பாக்கியை பாஜகவை சேர்ந்த நிர்வாகி சீர்காழி சத்யாவிற்கு கொடுத்தது தெரியவந்தது.

அதாவது பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருப்பவர் அலெக்ஸிஸ் சுதாகர். இவர் தான் சீர்காழி சத்யாவிற்கு துப்பாக்கியை சட்டவிரோதமாக வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகியான அலெக்ஸிஸ் சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தான் தற்போது அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

அதாவது அலெக்ஸிஸ் சுதாகர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு எஸ்பி பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை செங்கல்பட்டு கலெக்டர் ஏற்றார்.

இதையடுத்து அலெக்ஸிஸ் சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதன்மூலம் பாஜக நிர்வாகி அலெக்ஸிஸ் சுதாகருக்கு ஓராண்டு ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!